சுந்தரம் பள்ளி அருகே மாந்தோப்பில் பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுந்தரம்பள்ளி அடுத்துள்ள கிருஷ்ணகிரி – திருப்பத்தூர் மாவட்ட எல்லைப்பகுதியிலுள்ள மாந்தோப்பில் சுமார் 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் மாந்தோப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடப்பதாக அந்தபகுதி பொது மக்கள் கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்திலி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப் -இன்ஸ்பெக்டர் சாந்தி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.. அதில், தூக்கில் சடலமாக மீட்கப்பட்ட பெண், கிருஷ்ணகிரி மாவட்டம் சிவம்பட்டி ஊராட்சி கல்லாத்துபட்டி கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரது மனைவி மயிலா (வயது 40) என்பதும் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறுஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது.
இதனால் மனமுடைந்த மயிலா 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு வந்து வேலை செய்து விட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பும்போது அருகிலிருந்த மாந்தோப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. குடும்ப பிரச்சனையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.