பனமரத்துப்பட்டி அருகே சாலையில் கிடந்த எஃப்.எம் வெடித்து சிதறியதில் விவசாயி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க விவசாயி மணி என்பவர் தன்னுடைய வீட்டின் அருகே நேற்று முன்தினம் (ஜூன் 16) கிடந்த எஃப்.எம் ரேடியோ ஒன்றை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். இந்தநிலையில், நேற்று (ஜூன் 17) நண்பகல் பாட்டு கேட்பதற்காக எஃப்.எம் ரேடியோவை ஆன் செய்துள்ளார் மணி.. அப்போது, எஃப்.எம் ரேடியோ திடீரென வெடித்து சிதறியதில், பலத்த காயமடைந்த மணி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்..
அதேபோல ரேடியோ பெட்டி பயங்கர சத்தத்துடன் வெடித்தபோது, அருகில் இருந்த 12 வயது சிறுமி செளரூபியா மற்றும் வசந்த குமார் (வயது 37), நடேசன் (வயது 67) ஆகியோரும் பலத்த காயம் அடைந்தனர்.. இதனையடுத்து 3 பேரும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.. இதில் பலத்த காயமடைந்த 12 வயதுடைய சிறுமிசெளரூபியாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பனமரத்துப்பட்டி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. மேலும் வெடித்து சிதறிய பொருள் என்ன? என்பது குறித்து தடயவியல் நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். எஃப்.எம் ரேடியோ பெட்டிக்குள், வெடி பொருள் எப்படி வந்தது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.