சுதாசந்திரன் பிரதமருக்கு எழுதிய கடிதத்துக்கு பாதுகாப்பு படை மன்னிப்பு கோரியுள்ளது.
சுதாசந்திரன் பிரபல நடன கலைஞரும், நடிகையும் ஆவார். இவர் கடந்த 1981-ஆம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் தனது காலை இழந்தார். இதனால், இவர் செயற்கை கால் பொருத்தி தனது கலைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார். மேலும், இவர் தமிழ், ஹிந்தி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சுதாசந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒவ்வொரு முறை விமான நிலையத்திற்கு செல்லும்போது பாதுகாப்பு சோதனைக்காக எனது செயற்கை கால்களை கழற்ற சொல்வது வேதனையாக உள்ளது என கூறியுள்ளார். இதுகுறித்து, பிரதமர் நரேந்திரமோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை. நான் ஒரு நாட்டிய கலைஞர். என் பெயர் சுதா சந்திரன். நான் ஒவ்வொரு முறையும் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் தடுத்து நிறுத்தும்போது என் செயற்கை காலை வெடிகுண்டு பரிசோதனை வைத்து பரிசோதிக்கும்படி கேட்கிறேன். ஆனால், அவர்கள் எனது செயற்கைக் காலை கழற்றி காட்டச் சொல்கின்றனர்.
இவரின் இந்த வீடியோ வைரலான நிலையில், மத்திய தொழிலக பாதுகாப்பு படை இவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இதுதொடர்பாக, பாதுகாப்பு படை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மிகவும் வருந்துகிறோம். விதிமுறைகளின்படி சில சமயங்களில் மட்டுமே செயற்கை உறுப்பு பாகங்களை நீக்கி பரிசோதிக்க வேண்டும். ஆனால், உங்களை அவர்கள் ஏன் அப்படி செய்ய சொன்னார்கள் என்று சம்பந்தப்பட்டவர்களிடம் நாங்கள் விசாரிக்கிறோம். இனிமேல், இதுபோன்ற எந்த சிரமமும் ஏற்படாது என தெரிவித்துள்ளனர்.