டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்க உத்தரவிட கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் மனுதாரருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அபராதத் தொகையை முதலமைச்சர் நிவாரண நிதியில் ஒரு வாரத்தில் செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளனர்.
வழக்கு விவரம்:
மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய சென்னை சேர்ந்த ராம்குமார் ஆதீசன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த மே 7ம் தேதி தமிழகத்தில் நிபந்தனையுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட போது, மதுபானங்களை வாங்குவோருக்கு உரிய ரசீதுகளை வழங்கவில்லை. அதுமட்டுமல்லாமல் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்படுகின்றன. மேலும் விற்பனை தடை செய்யப்பட்ட நாட்களில் மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்கப்பட்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
அதேபோல, தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையும் நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவியர் கூட மது அருந்துவதை காண முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். சட்ட விரோதமாக மது விற்பனை தொடர்பாக புகார் அளிக்க தனி தொலைபேசி எண்ணை அறிவிக்கவேண்டும் என்றும், மதுவிற்பனை செய்வோருக்கு மொபைல் ஆப், இணையதளம் போன்றவற்றை ஆரம்பிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். மதுபான கடைகளில் ரொக்க விற்பனையை தடை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்:
இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் அதிமுகவை சேர்ந்தவர் என்றும், அதனை மறைத்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் டாஸ்மாக் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து உத்தரவிட மனுதாரருக்கு எந்த உரிமையும் இல்லை.
அதனால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து மனுவை திரும்பப் பெற்று கொள்வதாக மனுதாரர் தரப்பில் கேட்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்ததுடன் ரூ.20,000 அபராதம் விதித்து அந்த தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு ஒருவாரத்தில் செலுத்த வேண்டும் என மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளனர்.