கொரோனா வைரஸ் கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் பரவாது என தமிழகஅரசு மீண்டும் விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் கோழி இறைச்சி மற்றும் முட்டையினால் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வந்தது. தமிழக அரசு கோழி மூலம் கொரோனா பரவாது என விளக்கம் அளித்தது. இருப்பினும் பெரும்பாலானோர் சிக்கன் வாங்குவதை தவிர்த்து வந்தனர்.
இந்நிலையில் கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவாது என்று கால்நடைத்துறை மீண்டும் ஒருமுறை விளக்கமளித்துள்ளது. அதாவது, கோழி, முட்டை, இறைச்சி மூலம் கொரோனா பரவுவதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகிறது. கொரோனா வதந்திகளால் கோழி வளர்ப்பு தொழில் நலிவடைந்து பொருளாதார இழப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது.
மேலும் மலிவான புரத உணவான கோழி இறைச்சி, முட்டை ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. தயக்கமில்லாமல் கோழி இறைச்சியை அனைவரும் உட்கொள்ளலாம். மேலும் கோழி இறைச்சி, முட்டை தடை இல்லாமல் விற்பனை செய்வதை மாவட்ட ஆட்சியாளர் உறுதி செய்ய வேண்டும் என்றும்தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.