அரூர் அருகே காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலனை பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு காதலி கரம் பிடித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி (25). இவரும் தன்னுடன் வங்கியில் பணியாற்றிவரும் தருமபுரி வெங்கடம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரும் சென்ற ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், திருமணம் செய்துகொள்ள காதலன் மறுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ராஜேஸ்வரி மனு அளித்துள்ளார். தான் அளித்த மனுவின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “தன்னுடன் பணியாற்றி வரும் ஆனந்தகுமார், தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஓராண்டுக்கும் மேல் பழகிவிட்டு, தற்போது மறுத்துவிட்டார். அவர்களது வீட்டாரின் பேச்சைக் கேட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள முயற்சி நடைபெற்றுவருகிறது. இதுகுறித்து தான் கேட்டபோது தனது காதலுக்கு அவரது பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்கிறார். இதுகுறித்து மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகையால் தருமபுரி மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க இருக்கிறேன். அதன் பிறகும் நியாயம் கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.