தேனி மாவட்டத்தில் 14 வயது சிறுமியை கடத்தி சென்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடி தாலுகா பகுதியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பேஸ்புக் மூலம் தர்மபுரி மாவட்டம் அன்னசாகரம் வெங்கடாசலபதி பகுதியில் உள்ள நரேஷ்குமார் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து அந்த இளைஞன் ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்துள்ளனர். இதனையடுத்து சேலம் மாவட்டத்தில் உள்ள காரைக்காடு சோதனை சாவடியில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை காவல்துறையினர் பிடித்துள்ளனர். இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நரேஷ்குமார் என தெரியவந்துள்ளது. மேலும் அவர் கடத்தி சென்ற சிறுமியையும் போலீசார் பிடித்து போடி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து நரேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.