திருப்பூர் மாவட்டத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் கூலி வேலை பார்த்து வரும் நடராஜ். இவருக்கு சுதா என்ற மனைவியும், 17 வயதில் மைதிலி என்ற மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். நடராஜ் சொந்த வீடு ஒன்று கட்டி வரும் நிலையில் பகுதியில் வசித்து வரும் ஒரு இளைஞருடன் மைதிலிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் தந்தைக்கு தெரியவந்ததால் மைதிலியை கண்டித்திருக்கிறார். இதனால் மைதிலி மிகுந்த கவலையுடன் காணப்பட்டுள்ளார்.
புதன்கிழமை காலை நடராஜின் வீடு கட்டும் வேலைக்காக லாரி மூலம் செங்கல் வந்துள்ளது. அதை இறக்கி வைப்பதற்காக நடராஜ், மனைவியுடன் கட்டுமான வேலை நடைபெறும் இடத்திற்கு சென்றிருக்கிறார். வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, மைதிலி தூக்கிட்ட நிலையில் கிடந்துள்ளார். பதறி போன பெற்றோர் உடலை இறக்கி பார்த்தபோது, ஏற்கெனவே அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து பல்லடம் காவல் நிலையத்துக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்த பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.