Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கும்பல்…. துணிந்து விரட்டிய இளைஞர்கள்!

 அம்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த கும்பலை, அப்பகுதி இளைஞர்கள் துரத்தியதில் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பி ஓடினர்.

சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு இந்திரா நகர் பகுதியில் வசித்து வருகிறார் சத்தியராஜ். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் இருக்கும் தொழிற்சாலையில் வேலைபார்த்து வருகின்றார். இந்த சூழலில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இவர் குடும்பத்துடன் கடந்த 24ஆம் தேதி சொந்த ஊரான புதுக்கோட்டைக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் சத்தியாராஜின் வீட்டின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்து இளைஞர்கள், உடனே வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது சத்தியராஜின் வீட்டின் அருகே சந்தேகப்படும்படியாக  4 நபர்கள் நின்று கொண்டிருந்தனர். மேலும், வீட்டின் உள்ளே 2 நபர்களும் இருந்துள்ளனர். இதனைக் கண்ட இளைஞர்கள், ஒன்றாக சேர்ந்து அந்த கும்பலை துரத்தவே, அவர்கள் கொண்டுவந்த (யமகா R15) பைக்கை  அங்கையே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட, சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் காவல் துறையினர், கொள்ளை கும்பல் விட்டுச்சென்ற இருசக்கர வாகனத்தைக் கைப்பற்றியுள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |