ஈரோடு அருகே சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தவரை ஒரு கும்பல் கடத்தி சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பவானி வட்டம் தர்மாபுரி கிராமத்தைச் சேர்ந்த செல்வன் என்பவரும் குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த இளமதி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவருக்கும், திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த ஈஸ்வரன் மூலம் திருமணம் நடந்துள்ளது. பிறகு சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகேயுள்ள காவலாண்டியூர் பகுதியில் உள்ள ஈஸ்வரன் வீட்டில், செல்வனும் இளமதியும் தங்கியுள்ளனர்.
இருவரும் வெளியே சென்றிருந்த நேரத்தில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த 50 பேர், ஈஸ்வரனை தாக்கி கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து கொளத்தூர் அருகே உக்கம் பருத்திக்காடு பகுதியில் செல்வனையும், இளமதியையும் தனித்தனியே ஒரு கும்பல் கடத்திச் சென்றுள்ளது.
தகவலறிந்த போலீசார், செல்வன் மற்றும் ஈஸ்வரனை கருங்கல்லூர் பகுதியில் மீட்டுள்ளனர். இவர்களை கடத்தியதாக சிலரை காவல்நிலையம் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கடத்தப்பட்ட இளமதியை மீட்கக்கோரி, திராவிடர் விடுதலைக் கழகத்தினர் கொளத்தூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.