கொரோனாவால் பிரிட்டனில் வேலையிழப்பால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு 80 விழுக்காடு ஊதியத்தை அரசு வழங்கும் என்று நிதியமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா யாரும் நினைத்து கூட பார்க்காத வகையில் தீயாக பரவி 170க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருக்கிறது. நாளுக்குநாள் மக்களை கொன்று குவித்து வரும் கொரோனாவால் உலக நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிரிட்டனிலும் தொழில்துறையும், பொருளாதாரமும் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும், கொரோனா பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் தொழிலாளர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
இந்நிலையில் பிரிட்டன் அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, வேலையிழந்த தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் 80 விழுக்காடு ஊதியம் வழங்கப்படும் என்று பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் (Rishi Sunak) தெரிவித்துள்ளார். இதனால் தொழிலாளர்களுக்கு மாதம் 2,500 பவுண்டுகள் வரை கிடைக்கும். இந்திய மதிப்பில் இதன் மதிப்பு 2,20,000 ரூபாய்க்கு சமம்.
தொழிலதிபரும் இன்போசிஸின் இணை நிறுவனருமான நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் ஆவார். இவரை பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சராக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அண்மையில் நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.