தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி கதாநாயகராக வலம் வந்தவர் நடிகர் அர்ஜூன். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். படங்களில் நடிகராக மட்டும் நடித்து வந்த அர்ஜூன் தற்போது குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். படங்களில் நடிப்பது மட்டுமின்றி சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதோடு படங்களை இயக்கவும் செய்கிறார். இந்நிலையில் நடிகர் அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக தான் இயக்கும் புதிய படத்தில் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்கிறார்.
இந்த படத்தில் ஹிட் என்ற படத்தின் மூலம் பிரபலமான விஷ்வக் சென் கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில் நடிகர் அர்ஜுன் தற்போது அவசரமாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை வைத்துள்ளார். அப்போது அர்ஜுன் கூறியதாவது, நாங்கள் புதிய படத்தின் கதையை நடிகர் விஷ்வக் சென்னிடம் கூறிய போது அவர் படத்தில் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டார். அவர் கேட்ட சம்பளத்தையும் கொடுப்பதற்கு நாங்கள் ஒத்துக் கொண்டோம். ஆனால் கேரளாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் விஷ்வக் கலந்து கொள்ளவில்லை.
நான் என்னுடைய வாழ்க்கையில் யாருக்குமே இத்தனை முறை போன் செய்ததே கிடையாது. ஆனால் விஷ்வக்குக்கு பலமுறை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். ஆனால் அப்போதும் கூட அவர் கலந்து கொள்ளவில்லை. நடிகர்கள் அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் போன்றோர் தங்களுடைய தொழிலில் ஆர்வத்துடன் வேலை பார்க்கிறார்கள். ஒரு நடிகர் கலை சார்ந்த ஈடுபாட்டில் தான் கண்டிப்பாக தன்னுடைய வேலையை பார்க்க வேண்டும்.
இந்த உண்மை எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் நான் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியுள்ளேன். நடிகர் விஷ்வக் சென்னுக்கு பதிலாக வேறு ஒருவரை படத்தில் கதாநாயகராக நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார். மேலும் வளர்ந்து வரும் ஒரு நடிகரைப் பற்றி அர்ஜுன் பரபரப்பு புகாரை கூறி இருப்பது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.