வங்கி மோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் நீரவ் மோடியின் சொத்துகளை ஏலத்தில் விற்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று, அதனைத் திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக வைர வியாபாரி நீரவ் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, அவர் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். பின்னர், அமலாக்கத் துறையினர் கொடுத்த புகாரின்பேரில் அவர் அங்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
இந்த மோசடி வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை நீரவ் மோடிக்கு சொந்தமான விலை உயர்ந்த ஓவியங்கள், கைகடிகாரங்கள், பைக், கார் முதலியவற்றை பறிமுதல் செய்திருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் அனைத்தையும் ஏலத்தில் விற்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. சர்வதேச ஏல நிறுவனமான சாஃப்ரோநார்ட் (Saffronaut) சார்பில் வரும் பிப்ரவரி 27, மார்ச் 3-4 ஆகிய தேதிகளில் மும்பையில் இப்பொருள்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன.