நாமக்கல் மாவட்டம் ஆலம்பாளையம் பேரூராட்சியில் அதிமுக கட்சியின் சார்பில் சொத்துவரி, மின்கட்டண உயர்வு போன்றவற்றை கண்டித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் தற்போது 52% மின் கட்டணம் உயர்ந்துள்ளது. அடுத்த வருடம் ஜூன் மாதம் திமுக அரசு கூடுதலாக 6 சதவீதம் மின்கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது.
அதோடு மின்கட்டணத்தை வருடத்திற்கு 6% உயர்த்த திமுக முடிவு செய்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்க படுவார்கள். மின்கட்டண உயர்வு ஒரு புறம் இருக்க தற்போது ஆதார்-மின் இணைப்பு செய்வது அவசியம் என திமுக அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், அவர்களின் நிர்வாக திறமையை தான் காண்பிக்கிறது. எங்கள் ஆட்சிக்காலத்தில் விவசாயத்திற்கு மின் இணைப்புடன் மீட்டர் பொருத்திய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக அரசு தற்போது மின் இணைப்புடன் மீட்டர் பொருத்துவதற்கான விளக்கத்தை கூற வேண்டும்.
திமுக அரசு மின்சார வாரியத்திற்காக நிதிநிலை அறிக்கையில் 13000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் தற்போது எதற்காக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது என்பது தொடர்பாகவும் விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பிறகு ஒரே குடும்பத்தில் 2 மின் இணைப்புகள் வரை இருப்பதால், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படும். இதற்கு நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள். மேலும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்று விட்டால் திமுகவில் குடும்ப அரசியல் நடைபெறுவது உறுதியாகிவிடும் என்று கூறினார்.