சாலை விபத்தில் சிக்கி, மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயக்குமார் – ராணி தம்பதி. இவர்களுக்கு ரவீந்திரன், சுரேந்தர் என்று இரண்டு மகன்கள் இருந்தனர். இதில் இளையமகன் சுரேந்தர் தனது பெற்றோர்களை சமயபுரம் கோயிலுக்கு அழைத்துச் செல்வதற்காக, சேலம் பேருந்து நிலையத்திலிருந்து வழி அனுப்பி வைத்துவிட்டு, நேற்று இரவு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கிய சுரேந்தரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சாலையிலேயே மயங்கியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் அவரை மீட்டு அரசுப் பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இளைஞர் சுரேந்தர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்ட சுரேந்தரின் பெற்றோர், உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர். இருப்பினும், தனது மகனின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன் வந்தனர்.
இதையடுத்து, இன்று காலை சுரேந்திரன் உடலிலிருந்து இதயம், நுரையீரல், கண்கள் ஆகிய உறுப்புகள் எடுக்கப்பட்டது. அவை பலத்த காவல் துறை பாதுகாப்புடன் சேலத்திலிருந்து விமானம் மூலம் சென்னை குளோபல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
முன்னதாக சேலத்திலிருந்து சென்னை வந்த இந்த விமானத்தில் தான் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் பயணம் செய்துள்ளார். அப்போது மூளைச்சாவு அடைந்தவரின் உடல் வருவதற்காக, 15 நிமிடங்கள் விமானம் காத்திருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் நிலைமையைப் புரிந்துகொண்டு, ஆளுநர் தானும் காத்திருப்பதற்குச் சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.