தி.மு.க சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திருவாரூர் மற்றும் தஞ்சையில் போராட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதியளித்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்தினால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும் நீர் ஆதாரங்களும் பாதிக்கப்பட்டு, டெல்டா மாவட்டங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்ட பாலைவனமாகும். எனவே இத்திட்டத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
முன்பு ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேண்டும் என்றால் ஏற்கெனவே உள்ள விதிகளின்படி, சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும். அதுமட்டுமில்லாமல் கிணறு அமைக்கப்பட உள்ள பகுதியை சுற்றி வசிக்கும் பொதுமக்களிடமும் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி அவர்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும்.