சென்னை அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் காணாமல் போன சம்பவம் பெரும் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டம் ஆலந்தூர் பகுதியில் வசித்து வந்தவர் ஆதிகேசவன். இவருக்கு வயது 74 ஆகிறது. இவர் சமீபத்தில் தனது 103 வயதான தாயாரின் இறுதி சடங்கில் பங்கேற்று பின் வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய மூன்று நாட்களில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வசித்த பகுதி உட்பட்ட 162 வது வார்டு மாநகராட்சி அதிகாரிகள் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மொபைல் உபயோகிக்காத ஆதிகேசவன் எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்பதை அவர் மகனாலும், உறவினர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து அவரது மகன் மனைவி மற்றும் குடும்பத்தினர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட, பின் மூன்று நாட்களுக்குப் பிறகு தனது வயதான தந்தையை பார்ப்பதற்காக ஆலந்தூர் மருத்துவமனைக்கு மகன் சென்றுள்ளார். ஆனால் அங்கே முதியவர் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர். அதன் பிறகு அருகே உள்ள அரசு மருத்துவமனையில் சென்று கேட்டதற்கு, ஒருவேளை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம். கொரோனா நோயாளிகள் அங்குதான் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கூற, அங்கே சென்று விசாரித்தபோது அப்படி யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர்.
மருத்துவமனை தொடர்ந்து அலைக்கழித்ததால் ஆதிகேசவன் மகன் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அங்கே காவல்துறை அதிகாரிகளும் புகாரை ஏற்றுக் கொள்ளாமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆதிகேசவன் மகன் சார்பில் ஆட்கொணர்வு மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்டமாக ஆதிகேசவன் அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர் பிடிபட, அவரிடம் விசாரணை மேற்கொள்கையில், அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு முதற்கட்டமாக கூட்டிச் சென்று பின் அங்கிருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் இறக்கி விட்டுச் சென்றதாக தெரிவித்தார்.
அதன்படி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சம்பவ தினத்தன்று உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, ஆம்புலன்ஸ் டிரைவர் அவரை இறக்கி விட்டுச் சென்றதும், அதன் பிறகு எட்டு மணி நேரத்திற்கும் மேலாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவரை யாரும் கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டது தெரியவந்தது. 8 மணி நேரமாக அங்குமிங்குமாய் சுற்றிக் கொண்டிருந்த முதியவர் திடீரென மாயமாகியுள்ளார். எனவே அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தான் மாயமாகியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட 35 நாட்களாக கொரோனாவால் அழைத்துச் செல்லப்பட்ட ஆதிகேசவன் மீண்டு வந்துவிடுவார் என்று அவரது குடும்பம் காத்துக் கொண்டிருந்த நிலையில், ஒரு கொரோனா நோயாளி மாயமாகும் அளவிற்கு மருத்துவமனை நிர்வாகத்தினர், சுகாதாரத்துறையினரின் அலட்சியமாக இருந்தது தமிழக மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.