“கொரோனா தொற்றின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று 12 குழுக்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் 12 குழுக்கள் திறம்பட செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 344 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வரும். 2500 வெண்டிலேட்டர் கருவிகள் வாங்கவும் ஆர்டர் தரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்த அவர், கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும். கொரோனா தொற்று தற்போது இரண்டாம் நிலையில் தான் உள்ளது. தமிழகத்தில் மூன்றாவது நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது. மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.