கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதால், உசிலம்பட்டி அருகே பிரசவ வலியோடு வந்த 2 கர்ப்பிணிகளின் குழந்தைகள் இறந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால், அப்பகுதியில் இருக்கும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைகளுக்கே முதன்மையாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் உசிலம்பட்டி அருகே இருக்கும் பொட்டுலுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி பாண்டி மீனா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்..
இந்த சூழலில் பாண்டி மீனாவிற்கு, பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து பொட்டுலுபட்டி அருகே இருக்கும் நாட்டாம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கணவர் அவரை கொண்டு சென்றார். ஆனால் கொரோனா சிகிச்சையைக் காரணம் காட்டி, அங்கே அவருக்கு பிரசவம் பார்க்க அனுமதியில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கொண்டு சென்ற போதும், அதே பதிலை தான் அவர்கள் கூறியுள்ளனர். இதனால், பாண்டி மீனா 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பாண்டி மீனாவின் வயிற்றில் இருந்த சிசு இறந்து போனது. இதேபோல தான் சமீபத்தில், மற்றொரு சம்பவம் உசிலம்பட்டி அருகே இருக்கும் செட்டியபட்டியைச் சேர்ந்த தவசி என்பவரின் மனைவி தீபிகாவுக்கும் கொரோனா சிகிச்சையை காரணம்காட்டி தாமதமாக பிரசவம் பார்க்கப்பட்டது. இதனால் குழந்தை இறந்தே பிறந்தது.
கடந்த 10 நாட்களுக்குள் அடுத்தடுத்து கர்ப்பிணிகளின் குழந்தைகள் இறந்து பிறந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சையளிப்பது முக்கியம் தான்.. இருந்தாலும் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்ப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக இருக்கிறது.