தமிழக சட்டசபையில் அருணா ஜெகதீசன் அமைத்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை ஆணையம் குறித்த விவாதத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததும் எதிர்கட்சி தலைவராக இருந்த நான், உடனடியாக தூத்துக்குடிக்கு சென்றேன்.துப்பாக்கி சூட்டின் சத்தமும், மக்களின் மரண ஓலமும் ஒலித்துக் கொண்டிருந்த காட்சி ஆனது இன்றும் என் மனதை வாட்டிக் கொண்டிருக்கிறது.
இத்தகைய உணர்வுகளோடு தான், இங்கு உரையாற்றி இருக்கக்கூடிய அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், தங்களுடைய கருத்துக்களை இந்த மன்றத்திலே பதிவு செய்திருக்கிறீர்கள். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் அமைதி வழியிலே, மிகத் தொடர்ச்சியாக பல்லாண்டு காலமாக தூத்துக்குடி மண்ணில் நடந்த போராட்டமாகும்.
இதை மேலும் வலியுறுத்தக்கூடிய வகையில் கடந்த அஇஅதிமுக ஆட்சியிலே 22/05/2018 அன்று மாபெரும் ஊர்வலத்தை அந்த பகுதி மக்கள் நடத்தினார்கள். மாவட்ட ஆட்சியர் இடத்திலே மனு கொடுக்கவே, அவர்கள் இந்த ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்தப் பிரச்சனையை அன்றைய அதிமுக அரசு சரியாக கையாளவில்லை. ஊர்வலமாக வரக்கூடிய மக்களை அழைத்து பேசவில்லை. அவர்களிடம் மனுக்களை பெற்று கருத்துகளை கேட்டு அறிய, அன்றைக்கு அந்த அரசு தயாராக இல்லை.
இது மட்டும் அல்லாமல் ஊர்வலமாக வந்த மக்கள் மீது அதிகாரத்தை பயன்படுத்தி கலைப்பதற்கு திட்டமிட்டார்கள். துப்பாக்கி சூடும் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் உறுதி செய்து வெளியிட்டிருக்கிறது. 11 ஆண்கள், இரண்டு பெண்கள் என 13 பேர் துள்ள துடிக்க பட்ட பகலிலே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 40 பேர் பலத்த காயங்களை அடைந்துள்ளார்கள். 64 பேரு சிறிய அளவிலான காயங்களை அடைந்திருக்கிறார்கள்.
கடந்த அதிமுக ஆட்சியின் அன்றைய முதலமைச்சர் திரு பழனிச்சாமியின் எதேச்சை அதிகாரத்துக்கு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் அமைந்துள்ளது. அதாவது அதிமுக ஆட்சியின் ஆணவத்திற்கு தூத்துக்குடியில் இத்தனை உயிர்கள் பலியானது. கேட்பவர் அனைவருக்கும் ரத்தம் உறைய வைக்கக்கூடிய இந்த சம்பவம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.