பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபரான ரோட்ரிகோ துதர்தே மகள் துணை அதிபர் தேர்தலில் களமிறங்க வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் அடுத்த வருடம் மே மாதத்தில் அதிபர் மற்றும் துணை அதிபருக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் தற்போது இருக்கும் அதிபரின் மகளான சாரா துதர்தே நேற்று, துணை அதிபர் பதவியில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்.
மேலும், அதிபர் கூட்டணியில் இருக்கும் பொனாண்ட் மாா்கோஸ், அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். கடந்த 2016-ம் வருடத்திலிருந்து நாட்டின் அதிபராக இருந்து வரும் ரோட்ரிகோ துதர்தே, போதை பொருள் கடத்தலையும், விற்பனையையும் எதிர்த்து நடவடிக்கை மேற்கொண்டார்.
அப்போது, அவர் மனித உரிமைக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். அதன்பின்பு, அவர், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடவுள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால், பிலிப்பைன்ஸ் நாட்டின் அரசியல் அமைப்பு சட்டப்படி, ஒரு நபர் ஒரு முறை மட்டும் தான் ஆறு வருடங்களுக்கு அதிபர் பதவியில் இருக்க முடியும். எனவே, அவரின் நண்பர் அதிபர் பதவிக்கும், மகள், துணை அதிபர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள்.