சிறுவன் அதிகமாக சாப்பிடுகிறான் என்பதற்காக பாட்டியும் சித்தியும் கொடுமைப்படுத்திய சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
பெற்றோர்கள் பிள்ளைகளை பராமரிக்கவில்லை என்றால் அந்த குழந்தைகள் வளர்ப்பு கேள்விக்குறியாக மாறிவிடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பெங்களூருவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரு அருகே குரப்பனபால்யா பகுதியைச் சேர்ந்த இம்ரான் பாசா – ஆதிரா இவர்களுக்கு நான்காவதாக அர்மான் செரீப் என்ற ஆண் குழந்தை உள்ளது. இரண்டு வயதான அர்மான் செரீப் இயல்பாகவே அதிகமாக உணவு உண்ணும் பழக்கம் கொண்டவன்.
அந்த இரண்டு வயது குழந்தை அதிகமாக சாப்பிடுகிறான் என்ற ஒரே காரணத்தால் ஆத்திரமடைந்த குழந்தையின் பாட்டி முபீனா மற்றும் சித்தி பாத்திமா இருவரும் சேர்ந்து தினமும் அந்த சிறுவனை அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் கோபம் முற்றிப்போய் மெழுகுவர்த்தியை வைத்து சிறுவனின் கையில் சுட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல், இதனை செல்போனில் படம் பிடித்து, பதிவு செய்து தனது நண்பர்களுக்கு சித்தி பாத்திமா அனுப்பி உள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆன நிலையில், போலீசார் பாட்டி முபீனா மற்றும் சிறுவனின் சித்தி பாத்திமாவை கைது செய்துள்ளனர்.