காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதன் மூத்த தலைவர்களின் ஒருவரான குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்துள்ளார்.
காங்கிரஸின் பின்னடைவிற்கு ராகுல் காந்தியை காரணம் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாவுக்கு குலாம் நபி ஆசாத் அனுப்பியுள்ள ஐந்து பக்க ராஜினாமா கடிதத்தில், காங்கிரசுடன் தமக்கு பல ஆண்டு உள்ள தொடர்பை விவரித்துள்ளார். இந்திரா காந்தியுடன் தமக்கு இருந்த நெருக்கமான அரசியல் தொடர்பை விவரித்துள்ள,
அவர் காங்கிரஸில் இனி எதுவுமே பழையது போல இருக்காது என்ற நிலைமை ஏற்பட்டு விட்டதால் கட்சியிலிருந்து ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.காங்கிரஸில் நடக்கும் உள்கட்சி தேர்தல் கோமாளித்தனமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், காங்கிரஸில் எந்த மட்டத்திலும் உண்மையான தேர்தல் நடக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் தலைமையால் நியமிக்கப்பட்ட சில நபர்கள் கட்சி தலைமையகத்தில் அமர்ந்து கொண்டு சிலரை கட்சி பொறுப்புகளில் நியமிப்பதாகவும், குலாம் நபி ஆஷாத் கண்டித்துள்ளார். ராகுல் காந்தி மீது நேரடியாக குற்றம் சாட்டியுள்ள அவர் தேசிய அளவிலும், மாநில அளவிலும் காங்கிரஸ் பாஜகவிடம் மண்ணை கவி விட்டதாகவும் குமுறியுள்ளார். அரசியலை சீரியஸாக எடுத்துக் கொள்ளாத கட்சி தலைமையை இதற்கெல்லாம் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.