Categories
மாநில செய்திகள்

பிச்சை எடுக்க… 2 வயது குழந்தை கடத்தல்… 24 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை..!!

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பிச்சை எடுப்பதற்காக குழந்தையை கடத்திய தீபக் மண்டல் என்பவரை ரயில்வே காவல் துறையினர் 24 மணி நேரத்தில் கைது செய்து குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜீனா என்பவர் சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஜன 12ஆம் தேதி தனது இரண்டு வயது பெண் குழந்தை ரஷிதாவுடன் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது எழுந்து பார்த்தபோது குழந்தை ரஷிதாவை காணவில்லை. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக ரயில்வே காவல் துறையிடம் புகாரளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல் துறையினர், தீபக் மண்டல் என்பவர் குழந்தையை தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்ததை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து குழந்தையைத் தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் குழந்தை ர‌ஷிதாவை ரயில்வே காவல் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

குழந்தையை கடத்திய மேற்கு வங்கத்தை சேர்ந்த தீபக் மண்டலை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மீட்கப்பட்ட குழந்தையை சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் துறையினர் அவர்களது பெற்றோரிடம் இன்று ஒப்படைத்தனர்.

கடத்திய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல் துறை துணை கண்காணிப்பாளர் எட்வர்ட் தெரிவித்தார்.கடந்த ஆண்டு மட்டும் காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட 243 குழந்தைகளை மீட்டுள்ளதாக ரயில்வே காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |