சூழ்நிலை கருதி பருவத்தேர்வு ரத்து பற்றி முதலமைச்சர் முடிவெடுப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்துள்ளார். அதில், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் எனக் கூறியுள்ளார். 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தகவல் கேட்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத தயாராக உள்ள மாணவர்கள் குறித்த பட்டியல் பெறப்பட்ட பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
மதிப்பெண் பட்டியல் தயாராகும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். பாடத்திட்டம் குறைக்கும் பணி நடைபெற்று வருகிறது என கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். மேலும் கொரோனவால் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தாமதமாக உள்ளது. மாத இறுதிக்குள் தயாராகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். புத்தகங்கள் தயாரானதும் மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என கூறினார்.