மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.1,250 கோடியை விளம்பரங்களுக்காக செலவிடுகிறது என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கவும் பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். மேலும், ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான அழகுபடுத்தல் மற்றும் கட்டுமானத் திட்டங்களை ஒத்திவைக்க வேண்டும் என்றும், அந்த தொகையை புதிய மருத்துவமனை அமைக்க, மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க செலவிடலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனாக்கு எதிரான போராட்டத்தில் மிகவும் தேவையான நிதிகளை திரட்ட வேண்டும் எனவும், சிக்கன நடவடிக்கைகள் தேவை என்றும் கூறி உள்ளார். மேலும், மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் விளம்பரங்களுக்கு தடை விதித்து அந்த நிதியை சேமிக்க வேண்டும் என்றும் சோனியா காந்தி கூறி உள்ளார்.
அதேபோல, பிரதமர் நிவாரண நிதியில் உள்ள அனைத்து பணத்தையும் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு மாற்றி, அதன் செயல்திறன், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் எனவும் சோனியா கேட்டுக்கொண்டுள்ளார். அதேசமயம், எம்.பி.க்களின் சம்பளத்தை 30 சதவீதம் குறைக்கும் அமைச்சரவையின் முடிவுக்கு ஆதரவும், முழு ஒத்துழைப்பையும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.