தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்வுக்கு தமிழக மின்சாரத்துறைக்கு 1.60 லட்சம் கோடி கடன் இருப்பதால், கட்டணம் உயர்வு என தமிழக மின்சாரத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், மின்கட்டணம் உயர்வுக்கு கடன் தொகை மட்டுமே காரணம் கிடையாது, மத்திய அரசும் அவ்வப்போது அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக மத்திய அரசினுடைய எரிசக்தி அமைச்சகத்தின் உத்தரவின்படி மின் கட்டண திருத்தம் என்பது அவ்வப்போது செய்யப்பட வேண்டும்.
அப்போதுதான் அவர்கள் கொடுக்கப்படக்கூடிய மானியம், பல்வேறு நலத்திட்டங்கள் நமக்கு கிடைக்கப்பெறும். நாம் தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த மின்சார கட்டணத்தை உயர்த்தாமல் இருக்கக்கூடிய காரணத்தால் மத்திய அரசு அவ்வப்போது கண்டனம் தெரிவித்து வருகின்றது.
எனவே வேறு வழியில்லாமல் கடன் தொகை, வட்டி தொகை, மத்திய அரசினுடைய அழுத்தம் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் மின்சார கட்டண உயர்வை நாங்கள் அறிவித்திருக்கிறோம் என தமிழக மின்சாரத்துறை விளக்கம் கொடுத்திருக்கிறது.
8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாகவும், வேறு வழியில்லாமல் இந்த கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கக்கூடிய காரணத்தால் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் செய்தி குறிப்பு வாயிலாக மின்சாரத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.