தேனியில் சொத்துக்காக தம்பியை கொன்றவருக்கு 7 ஆண்டு சிறை மற்றும் கூடுதலாக ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் சிவாஜி நகரில் வசித்து வருபவர் மாயாண்டி. இவரது மனைவி ராஜாமணி. இவர்கள் இருவருக்கும் 3 மகன்கள் உள்ளனர். முதல் மகன் பாண்டிய ராஜன் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இரண்டாவது மகன் தனபாண்டி மூன்றாவது மகன் சுந்தரபாண்டி. கடந்த 2016-ம் ஆண்டு மூத்த மகன் பாண்டியராஜனுக்கும் இரண்டாவது மகன் தன பாண்டியனுக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாண்டியராஜன் தனபாண்டியனை தாக்க அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பெயரில் காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையைடுத்து மூன்றாவது மகன் சுந்தர பாண்டியன். பாண்டிய ராஜனிடம் சென்று தாக்குதல் குறித்து கண்டித்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அவர் பாண்டியராஜனை கயிற்றால் இறுக்கி கொலை செய்து சுடுகாட்டில் புதைத்து விட்டார். பின் நீண்ட நாட்களாக சுந்தர பாண்டியனை காணாததால் பாண்டியராஜனிடம் சென்று விசாரித்தார் ராஜமணி.
அப்போது சுந்தர பாண்டியனுக்கு தீராத நோய் இருந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான் அவனை நான்தான் மயானத்தில் புதைத்தேன் என்று தாயிடம் பாண்டியராஜன் கூற, இதனால் சந்தேகம் அடைந்த தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் சுடுகாட்டிற்குச் சென்று புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர்.
அதில் சுந்தரபாண்டி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பாண்டியராஜன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அந்த வழக்கு இவ்வாண்டு வரை விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கொலை செய்த குற்றத்திற்காகவும், தடயத்தை மறைத்த குற்றத்திற்காகவும் 7 ஆண்டு சிறை மற்றும் ஆயுள் தண்டனை வழங்கினர்.
கூடுதலாக 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர். பணத்தை செலுத்தத் தவறினால் மேலும் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்குமாறும் உத்தரவிட்டனர். இந்த தண்டனைகளை அவர் தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி முதலில் ஏழு ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து விட்டு அதன் பின் ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.