மின்விசிறியின் சுவிட்சை தொட்ட சிறுவன் திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியில் தஷ்ணாமூர்த்தி என்பவர் ராமகிருஷ்ணன் மூன்றாவது நகரை சேர்ந்தவர். இவருக்கு தரணீஸ்வரன் என்ற 4 வயது மகன் இருந்தார். சூளைமேடு பகுதியில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை ஒன்றை தஷ்ணாமூர்த்தி நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை முழுவதும் பலத்த மழை பெய்தது. அப்போது விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மின்விசிறி சுவிட்சை தொட்டுள்ளான்.
இதையடுத்து திடீரென மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்துள்ளார் சிறுவன். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சிறுவனை உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். சூளைமேடு காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சிறுவனின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.