மூணாறு ராஜமலை அருகேயிருக்கும் பெட்டிமுடி எனும் இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 8 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தென்மேற்குப் பருவமழை மிகவும் தீவிரமடைந்து பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக, இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு நிற அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்தசூழலில் இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் நேற்று நள்ளிரவில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.
மூணாறு ராஜமலை அருகே இருக்கும் ‘பெட்டிமுடி’ எனும் இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இங்கு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் இருந்தன.. இதில் சுமார் 80க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் தற்போது 8 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இடுக்கி மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
மூணாறில் தொடர்ந்து வெளுத்து வாங்கி வரும் கனமழையால் பெரியவாரை பாலம் சேதமடைந்துள்ளது. இதனால் சம்பவயிடத்திற்கு மீட்புப் படையினர் செல்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.. இதன் காரணமாக மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன..
கேரள மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தைப்போலவே மீண்டும் ஒரு இயற்கைப் பேரிடரால் அதிக உயிரிழப்புகள் நிகழக் கூடும் சூழல் உருவாகியுள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.