மியான்மரில் போராட்டக்காரர்களுக்கு ராணுவம் விதித்துள்ள அடக்குமுறையால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.
மியான்மரில் யாங்கூன், நேபிடாவ், மாண்டலே ஆகிய நகரங்களில் ராணுவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மியான்மரில் முதலில் பேஸ்புக்கை ராணுவம் தடை செய்தது. இப்போது ட்விட்டர் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றையும் முடக்கியது. மேலும் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
ஆகையால் ராணுவத்திற்கு எதிராகவும், ஆங் சான் சூகியை விடுவிக்க கோரியும், ஜனநாயகத்தை மீட்கவும் மக்கள் போராடி வருகின்றனர். அப்படி போராடும் மக்கள் மீது கடுமையான நடவடிக்கைகளும், அபராதமும் விதிக்கப்படும் என ராணுவம் எச்சரித்துள்ளது. மேலும் போராட்டக்காரர்களுக்கு 20 ஆண்டுகால சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் மேற்கொள்ளும் நடவடிக்கை கண்டனத்துக்குரியது என்று ஐநா தெரிவித்துள்ளது. இது குறித்து ஐநா மேலும் கூறியதாவது, அமைதியாக போராடும் மக்களுக்கு முழு உரிமையும் உள்ளது. மியான்மரில் நடக்கும் அடக்குமுறையை உலக நாடுகள் கவனித்து வருகிறது. ஆகையால் போராட்டக்காரர்களை ஒடுக்க நினைக்கும் நடவடிக்கையால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.