கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனாரின் 86-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள வ.உ சிதம்பரனாரின் மணிமண்டபத்தில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு நெல்லை மாவட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் அனைத்தும் நடைபெற்று வரும் நிலையில் பாஜக-அதிமுக கூட்டணி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
தேர்தலை பொருத்தவரை கட்சியின் கூட்டணிகள் என்பது தான் பலம். ஒருவேளை யாரும் யாருடனும் கூட்டணி வைக்க கூடாது என்று கூறினால் நன்றாக இருக்கும். அதன் பிறகு அதிமுக கட்சியில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து செயல்பட வேண்டும். அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் தான் வருகிற தேர்தலில் வெற்றி பெற முடியும். எனக்கு நெல்லை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் இருக்கிறது. ஒருவேளை பாஜக மேலிடம் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன்.
மத்திய அரசாங்கம் கொண்டு வந்துள்ள 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு திமுக அரசு எதிர்ப்பு தெரிவித்ததோடு நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர். இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டில் மேல் ஜாதி, கீழ் ஜாதி என்றெல்லாம் கிடையாது. இதில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களும் அடங்குவர். எனவே திமுக கட்சி அனைத்து 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்த வேண்டும். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பாக பணி செய்வேன் என்று கூறியுள்ளார்.