சென்னையில் 74 வயது மூதாட்டி கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி இருக்கும் புகைப்படத்தை முதல் முறையாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 48 பேருக்கு குறைவான உறுதி செய்யப்பட்டதால் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் 8 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனா பாதித்த 21 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சுகாதாரத்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை மீனம்பாக்கம் அருகில் உள்ள பொழிச்சூரை சேர்ந்த 74 வயது மூதாட்டி கடந்த மாதம் 26ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மருத்துவ குழுவால் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று பூரண குணமடைந்து வீ்ட்டிற்கு செல்கிறார். அவருக்கு உயர் ரத்த அழுத்தமும், கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோயும் இருந்தது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையிருந்து டிஸ்சார்ஜ் ஆன அவருக்கு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவர்கள் மலர்க்கொத்து மற்றும் பழங்கள் வழங்கி வழியனுப்பி வைத்தனர். இந்த புகைப்படத்தை முதல் முறையாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.