தாயை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை கே.சி.ரோடு பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மாரியப்பன் என்ற மகன் உள்ளார். கடந்த 09.06.2020 அன்று வீட்டில் இருந்த இசக்கியம்மாளிடம் மாரியப்பன் பீடி தொழிலாளருக்கான ஓய்வூதியத்தை தறுமாரும், இடத்தையும் தனது பெயருக்கு எழுதி வைக்குமாறும் கூறி தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன் பெற்ற தாய் என்றும் பார்க்காமல் கம்பால் அடித்தும், கத்தியால் சரமாரியாகக் குத்தியும் கொலை செய்துவிட்டு அங்கிருந்து வெளியே வந்துள்ளார்.
அப்போது மாரியப்பன் அங்கு வந்த தன்னுடைய அண்ணன் பெரியசாமியிடம் தாயார் கொலை செய்யப்பட்டது குறித்து வெளியில் கூறினால் உன்னையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து செங்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாரியப்பனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதனை விசாரித்த நீதிபதி விஜயகுமார் தாயை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.