வயிற்றுப்புண் காரணமாக வழக்கறிஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சேரமங்கலம் கன்னிவிளை கிராமத்தில் சுலோச்சனா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனீஸ் என்ற மகன் இருந்துள்ளார். இதில் அனீஸ் என்பவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அனிஷ் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வயிற்று வலி இருப்பதால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனையடுத்து சிகிச்சை பெற்றபிறகும் அனீஸின் வயிற்றுப்புண் ஆறாத காரணத்தினால் மனஉளைச்சலில் இருந்த அவர் தன் வீட்டின் மாடிக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நீண்ட நேரமாகியும் அனீஸ் கீழே இறங்கி வராததால் சந்தேகமடைந்த அவருடைய தாய் சுலோச்சனா மாடிக்கு சென்று பார்த்துள்ளார். இதனையடுத்து மாடியில் இருக்கும் அறையின் தாழ்பாள் உள்புறமாக போடப்பட்டு இருந்ததால், சுலோச்சனா அருகில் இருப்பவர்களின் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அனீஸ் வாயில் நுரைதள்ளியவாறு சடலமாக கிடந்ததை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இவ்வாறு மகன் சடலமாக கிடப்பதை பார்த்த சுலோச்சனா கதறி அழுத சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனிஸின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வழக்கறிஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.