மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு தஞ்சை பெரியகோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு 100 கிலோ காய்கறிகள் மற்றும் கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் 1000 ஆண்டுகளை கடந்து நிற்கும் சிறப்பு வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் மட்டுமே மிகப்பெரிய நந்தி பெருமாள் சிலை இருக்கிறது. இங்கு ஒரு டன் காய்கறி, பழங்கள், மலர்கள் போன்றவற்றால் நந்தி பெருமானுக்கு அலங்காரம் செய்து 108 பசுக்கள் வரிசையாக நிறுத்தி பிரம்மாண்ட வழிபாடு நடத்தப்படுவது தஞ்சை பெரிய கோவிலின் வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று நடவடிக்கை மற்றும் தொடர் மழையின் காரணமாக எளிமையான முறையில் நந்தி பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இங்குள்ள நந்தி பெருமானுக்கு தயிர், சந்தனம், பால், மஞ்சள், திரவிய பொடி போன்ற பொருட்களை பயன்படுத்தி அபிஷேகம் செய்தனர். இதனைத்தொடர்ந்து பூசணிக்காய், வாழைக்காய், உருளைக்கிழங்கு, கேரட், வெள்ளரிக்காய், சௌசௌ, பீட்ரூட், முட்டைக்கோஸ், பாகற்காய் போன்ற 100 கிலோ காய்கறிகள், அன்னாசி, கொய்யா, ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை போன்ற 100 கிலோ பழங்கள் மற்றும் மலர்களுடன், சந்தனத்தால் நந்தி பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை வழிபாடு நடத்தப்பட்டது.
மேலும் ஒரு பசுமாட்டை அதன் கன்றுடன் அழைத்து வந்து நந்தி பெருமானுக்கு முன்பு நிறுத்தப்பட்டு கோ பூஜையும் நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு பெருமாள் மண்டபத் தூண்களில் கரும்பும், வாழையும் கட்டப்பட்டிருந்தன. இந்த விழாவில் கலந்துகொண்ட பொதுமக்கள் நந்தி பெருமானை தரிசித்து விட்டு சென்றனர். மேலும் நந்தி பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்ட பழங்கள் காய்கறிகளை இன்று பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.