திருத்தணியில் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்தபோது உயிரிழந்த மூதாட்டியின் உடலை கொரோனா அச்சத்தால் யாரும் அகற்ற முன்வராததால் 5 மணி நேரம் வீட்டு வாசலில் உடல் கிடந்த அவலம் நிகழ்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனை அடுத்து அவரது வீட்டை நகராட்சி ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வீடாக கருதி யாரும் செல்ல முடியாத வகையில் தடுப்பு சுவர் வைத்து அடைத்தனர். அந்த வீட்டில் 80 வயதான மூதாட்டி சந்திரா மட்டும் தனியாக இருந்துள்ளார். முதுமையில் உள்ள அவருக்கு உணவு குடிநீர் வழங்க எவ்வித உதவியுமின்றி 5 நாட்களாக முடங்கியிருந்த நிலையில் இன்று காலை வீட்டு வாசலில் மயங்கி விழுந்தார்.
அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூதாட்டிக்கு உதவ மறுத்து திரும்பிச் சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் நகராட்சி அலுவலர்களுக்கு புகார் செய்தும் யாரும் வராத நிலையில் பொதுமக்களும் கொரோனா அச்சத்தில் உடல் அருகில் செல்லாததால் மூதாட்டியின் உடல் 5 மணி நேரமாக அங்கேயே கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.