எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிள் எரிந்து கொண்டிருந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வாரம் ஒரு முறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு, நேற்று அதிகாலை 3 மணி அளவில் ராமேஸ்வரம்-தங்கச்சிமடத்திற்கு இடைப்பட்ட பகுதியில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது, ரெயில்வே தண்டவாள பாதையில் மோட்டார்சைக்கிள் எரிந்து கொண்டிருந்ததை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் ரெயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின் அவர்கள் 2 பேரும் மண்ணை அள்ளிப்போட்டு தீயை அணைத்து மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து ரெயில்வே தண்டவாளத்தில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என பார்வையிட்டு அதன்பின் சுமார் 40 நிமிடம் தாமதமாக செகந்திராபாத் ரெயில் ராமேசுவரம் நிலையத்தை அடைந்தது. இதனையடுத்து ரெயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிந்து கிடந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றி அதில் இருந்த பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் எரிந்து கிடந்த இரு சக்கர வாகனம் ராமேசுவரம் மெய்யம்புளி பகுதியில் வசிக்கும் ராஜசேகர் என்பவருடையது என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ரெயில்வே காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராஜசேகர் கடந்த 4-ந் தேதி வேலை முடித்துவிட்டு மெய்யம் புளி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பேருந்து நிலையம் அருகில் 2 பேர் ராஜசேகரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் வீட்டிற்கு சென்று மோட்டார் சைக்கிளை வெளியே நிறுத்தி விட்டு தூங்கிவிட்டு மறுநாள் காலையில் பார்த்தபோது மோட்டார்சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.