பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் உருவ கேலி போன்றவற்றை தன்னம்பிக்கையுடன் சமாளிக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார்.
மலையாளத்தில் பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை சாய் பல்லவி. இவர், தமிழில் என்.ஜி.கே பாவ கதைகள் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒருவர் தன் முகநூல் பக்கத்தில், சாய் பல்லவி, பெரிய அளவில் ஒன்றும் அழகு கிடையாது.
அவரின் தாடை கரடு முரடாக இருக்கிறது. அவருக்கு யானை காதுகள், அதனை முடியை வைத்து மறைத்துக்கொண்டிருக்கிறார், அவர் அவ லட்சணமாக இருக்கிறார். அவற்றை கேமரா கோணங்கள் மூலம் சரி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு, பலரும் சாய்பல்லவிக்கு ஆதரவு கொடுத்து வந்தார்கள்.
இந்நிலையில், இந்த பிரச்சனை குறித்து பேசிய புதுச்சேரியின் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், “நானும் இதே போன்று உருவ கேலி மற்றும் கிண்டலை சந்தித்திருக்கிறேன். இது போன்ற காயங்களை புறந்தள்ளிவிட்டு சென்று கொண்டிருக்கிறேன். குள்ளச்சி, கருப்பி என்றெல்லாம் காயப்படுத்தும் விதத்தில் கூறுவதை, நம் திறமை மற்றும் பணியால் எதிர்க்க வேண்டும்.
இது போன்ற பிரச்சனை ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு தான் அதிகம் இருக்கிறது. இந்த உடல் ரீதியான கேலி கிண்டல்களுக்கு பெண்கள் மனதளவில் தேங்கக்கூடாது. பெண்களின் முன்னேற்றத்தை தடுக்கக்கூடிய இவ்வாறான செயல்களை தன்னம்பிக்கையுடன் சமாளிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.