அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி உடனடியாக தொடங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. அதனால் தான் நீட் தேர்வை பா.ம.க கடுமையாக எதிர்க்கிறது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை பா.ம.க. முழுமையாக ஆதரிக்கிறது. அதே நேரத்தில் நீட் விலக்கு என்ற இலக்கை எட்டும் வரை அதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். அதனை கருத்தில் கொண்டுதான் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்பு நடப்பாண்டில் இன்னும் தொடங்கப்படவில்லை. அதற்கான அறிகுறி கூட தெரியவில்லை. இதனையடுத்து மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதனால் அவர்களுக்கு குறைந்தது 500 இடங்கள் கிடைத்துவிடும் என்பதாலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்குவதில் அரசு அலட்சியம் காட்டக்கூடாது. எனவே அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.