தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று காரணமாக கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள, கர்நாடக கடற்கரைப் பகுதி, இலட்சத்தீவு, மத்தியகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு சுமார் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைகாற்று வீசும் என்றும். மேலும் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த இரு தினங்களுக்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.