தம்பதியினரை தாக்கி நகை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள உத்தம சோழபுரம் சூளைமேடு பகுதியில் சண்முகம்-சாந்தி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரஞ்சித்குமார் என்ற மகன் இருக்கிறார். இவர் கோவையில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மேலும் இந்த தம்பதியரின் மகளும் திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வருகிறார். இதனால் சண்முகம்-சாந்தி இருவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் தம்பதியினர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சண்முகத்தின் வீட்டு கதவு வேகமாக தட்டப்பட்டது. ஆனால் வீட்டுக்கு வெளியே கொள்ளையர்கள் இருப்பதை அறிந்த சண்முகம் கதவை திறக்கவில்லை.
எனினும் கடப்பாரையால் கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் சண்முகம், சாந்தி ஆகிய இருவரையும் தாறுமாறாக தாக்கினர். இதனையடுத்து கொள்ளையர்கள் அவர்களிடம் இருந்த 10 பவுன் நகையை பறித்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். அதன்பின் ரத்த காயங்களுடன் சண்முகம் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையில் காயமடைந்த தம்பதியினரை காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சண்முகத்தின் வீட்டுப் பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்கள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இவ்வாறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். எனினும் இதற்கு முன்பாக ஆட்களை தாக்கி நகை, பணம் பறித்தவர்களது விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.