தலீபான்கள் நடத்தும் வன்முறை தாக்குதல்களினால் உலகளாவிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என ஆப்கான் ஜெனரல் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவத்துக்கு துணையாக இருந்த நேட்டோ படைகள் வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து நேட்டோ படைகள் வெளியேறுவதை தொடர்ந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனை தொடர்ந்து அந்நாட்டு ராணுவத்திற்கும் தலீபான்களுக்கும் இடையேயான தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் உள்ள 50 சதவீத பகுதிகளை தாலிபான்கள் கைவசப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்ற தலீபான்கள் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். இதற்கிடையில் நேட்டோ படைகளும் வெளியேறுவதால் ஆப்கான் ராணுவம் சற்று வலிமையற்று காணப்படுகிறது.
மேலும் தலீபான்களின் தாக்குதலுக்கு ஆப்கான் ராணுவம் பதிலடி கொடுக்க முடியாமல் திணறி வருகிறது. இதனை அடுத்து தலீபான்கள் இராணுவத்தினர் கைவசமுள்ள பகுதிகளை வேகமாக கைப்பற்றி வருகின்றனர். அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மண்ட் மாகாணத்தின் தலைநகரான லஷ்கர் காவை கைபற்ற குறி வைத்துள்ளனர். இதனால் அங்கு இரு நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலினால் மக்கள் தங்களின் உயிரை பாதுகாப்பதற்காக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். அதிலும் முக்கியமாக ஹெல்மண்ட் மாகாணம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ராணுவ பிரச்சாரத்தின் மையப்புள்ளியாக திகழ்ந்தது. இந்த மாகாணத்தில் தலீபான்கள் வெற்றி பெறும் நிலையில் அது அரசுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இதனை கைப்பற்றினால் 2016 க்கு பிறகு தலீபான்கள் வெல்லும் முதல் தலைநகராக லஷ்கர் கா இருக்கும். இந்த தாக்குதல் குறித்து அரசு படைகளுக்கு தலைமை தாங்கும் ராணுவ ஜெனரல் சாமி சதாத் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “லஷ்கர் கா படைகளை கைப்பற்றினாலும் எங்களின் தாக்குதலை நிறுத்திவைக்க முடியாது. இருந்த போதிலும் தலீபான்களின் மற்ற ஆதரவாளர்கள் குழுக்களாக எழுச்சி பெறுவது ஆப்கானை தாண்டியும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள சிறிய அமைப்புகள் அணியாக திரள்வதற்கான ஊக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இது உலகின் பாதுகாப்பிற்கு பேரழிவை ஏற்படுத்தும். இந்த போரானது ஆப்கானிஸ்தான் நாட்டுக்கானதல்ல. விடுதலைக்கும் சர்வாதிகாரத்துக்கு இடையே நடக்கும் போராகும்” என்று கூறியுள்ளார்.