தலைமை செயலாளரை மாற்றக்கோரி மிசோரம் மாநில முதலமைச்சர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மிசோரம் மாநிலத்தின் தலைமை செயலாளராக லால்னுமாவியா சாகோ இருந்தார். இவர் ஓய்வு பெற்ற பின்பு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய தலைமைச் செயலாளராக கடந்த மாதம் 29 ஆம் தேதி ரேணு சர்மாவை நியமனம் செய்தது. ஆனால் ரேணு சர்மாவுக்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரியும். குறிப்பாக மிசோ மொழி தெரியாது என்பதால் நிர்வாக ரீதியாக பல இன்னல்கள் எழுந்தது.
இதனையடுத்து மிசோரம் மாநில முதலமைச்சர் ஜோரம்தங்கா உள்துறை அமைச்சரான அமித் ஷாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ” எங்கள் அமைச்சர்களுக்கு இந்தி தெரியாது மற்றும் ஆங்கிலம் புரியாது. ஆதலால் புதிய தலைமைச் செயலாளரை மாற்றிவிட்டு மிசோ மொழி தெரிந்த நபரை நியமனம் செய்ய வேண்டும். மேலும் கூடுதல் தலைமை செயலாளராக இருக்கும் ஜே.சி.ராம்தங்காவை அப்பதவிக்கு பரிந்துரைத்துள்ளோம்” என்று கூறப்பட்டிருந்தது.