வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழக்குறிச்சி வடக்கு தெருவில் அருண்குமார்-சத்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இதில் அருண்குமார் வெளிநாட்டில் பணி செய்து வந்துள்ளார். இவர்களது வீட்டிற்கு அருகில் கூலித் தொழிலாளியான ராஜாங்கம் மகன் விஜய் வசித்து வந்தார். இவர் அருண்குமாரின் மனைவி சத்யாவிடம் செல்போன் நம்பர் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனை அறிந்த சத்யாவின் மாமியார் தேன்மொழி விஜய்யை கண்டித்ததோடு காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின்படி காவல்துறையினர் விஜய்யை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கண்டித்து அனுப்பினர்.
இதனையடுத்து விஜய் எந்தவிதமான பிரச்சனையும் செய்யாமல் இருந்துள்ளார். இந்நிலையில் சத்யாவின் கணவர் அருண்குமார் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்தார். அப்போது விஜய்யை வல்லரசு என்பவர் வடசேரி மதுகடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன்பின் வடசேரி செல்லும் வழியில் அருண்குமார் மற்றும் அவரது நண்பர் பரத் இருவரும் நெம்மேலி கண்ணனாறு அருகே விஜய்யை பார்த்துள்ளனர். இதனால் இருவரும் சேர்ந்து சத்யாவிடம் செல்போன் நம்பர் கேட்டது தொடர்பாக விஜய்யிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த விஜய் மயங்கி கீழே விழுந்தார். இதனைதொடர்ந்து நீண்ட நேரமாகியும் மகனை காணவில்லை என்று விஜய்யின் தந்தை ராஜாங்கம் அவரை தேடியுள்ளார். இந்நிலையில் விஜய் இறந்து கிடப்பதாக ராஜாங்கதிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து ராஜாங்கம் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜய்யின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அருண்குமார், பரத், வல்லரசு ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.