தட்டி கேட்ட மைத்துனரை கட்டையால் தாக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள நரசோதிப்பட்டி பகுதியில் ரவுடியான தட்சணாமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் தட்சணாமூர்த்திக்கும் அவரின் மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் தட்சணாமூர்த்தி தனது மனைவியை தாக்கிய போது அவரின் மைத்துனரான கார்த்திக் என்பவர் ஏன் இவ்வாறு அக்காவை தாக்குகிறார்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த தட்சணாமூர்த்தி மைத்துனர் என்று கூட பாராமல் அவரையும் கட்டையால் தாக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் மயங்கிக் கீழே விழுந்து கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரின் அக்கா அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு கார்த்திக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து கார்த்திக்கின் அக்கா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மைத்துனரை கட்டையால் தாக்கிய குற்றத்திற்காக தட்சணாமூர்த்தியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.