ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் தகுதி தேர்வுகள் நடத்தப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படவில்லை. இதன் காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்கள் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து. இதனையடுத்து 13,300-க்கும் மேற்பட்ட ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த தேர்வு நடைபெறும் நாள் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பங்களில் உள்ள திருத்தங்களை சரி செய்ய கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் காரணமாக ஆசிரியர் தேர்வு வாரியம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூலை 11-ஆம் தேதி முதல் 16-ம் தேதி வரை விண்ணப்பங்களில் உள்ள திருத்தங்களை சரி செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்குள் கண்டிப்பாக அனைவரும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும், மேற்கொண்டு கால அவகாசம் கொடுக்கப்பட மாட்டாது என்றும் தேர்வு வாரியம் கூறியுள்ளது.