போகோஹரம் உட்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடும் ஆதிக்கம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நைஜீரியாவில் உள்ள ஜம்பாரா மாகாணத்தில் பயங்கரவாதிகள் சிலர் சிறுவர்கள், பெண்கள் உட்பட 180-க்கும் மேற்பட்டோரை கடத்தி சென்றுள்ளனர். இந்த நிலையில் மாநில அரசு கடத்திச் செல்லப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்க பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும் கடத்திச் செல்லப்பட்ட மக்களை பயங்கரவாதிகள் விடுவிக்காமல் இருந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு சிபிரி வனப்பகுதிக்குள் கடத்தப்பட்ட அப்பாவி மக்கள் சிறை பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் பேரில் சிபிரி வனப்பகுதிக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட அதிரடி காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மக்களை சிறை பிடித்து வைத்திருந்த பயங்கரவாதிகள் காவல்துறையினரை கண்டதும் பதறி அடித்து ஓடியுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் அங்கு பிணைக்கைதியாக இருந்த 187 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.