தேனி மாவட்டத்தில் வனப்பகுதிக்குள் பதுங்கியிருந்த நபர்களை பிடிக்க முயன்றதில் வன காவலரை மர்மநபர்கள் தாக்கியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக-கேரள எல்லையான தேனி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடிய அதன் இறைச்சிகளை கேரள மாநிலத்திற்கு கடத்தி சென்று விற்பனை செய்வது தொடர்ந்து வருகின்றது. இதனை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கம்பம் மேற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட செல்லார்கோவில் மெட்டு வனவர் இளவரசன் தலைமையில், வனக்காவலர்கள் காஜாமைதீன், மனோஜ் குமார், ஜெயக்குமார், மகாதேவன் ஆகிய 5 பேரும் நேற்று முன்தினம் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
அப்போது அந்த காட்டுப்பகுதியில் சிலர் பதுங்கி இருந்தது வனத்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் அவர்களை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து 7 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். மேலும் அந்த கும்பலில் இருந்தவர்கள் வனகாவலர் காஜாமைதீனை அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களிடம் இருந்த பயங்கர ஆயுதங்களுடன் தப்பியோடியுள்ளனர்.
இந்நிலையில் காயமடைந்த காஜா மைதீன் தற்போது தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தப்பியோடிய 7 மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அவர்கள் பயங்கரமான ஆயுதங்களை வைத்திருந்ததால் நக்சலைட் அமைப்புகளுடன் தொடர்புடையவர்களா எனவும், வனவிலங்குகளை வேட்டையாட வந்தவர்களாக இருக்கலாம் எனவும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.