அமெரிக்க நாட்டில் துப்பாக்கிச்சூடு தாக்குதல்கள் தொடர்வதற்கு எதிராக மக்கள் மிகப்பெரிய பேரணியை தொடங்கியுள்ளனர்.
அமெரிக்க நாட்டில் சமீப நாட்களில் பொதுவெளிகளில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த மாதத்தில் ஒரு ஆரம்பப் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்ததாவது, நாட்டில் துப்பாக்கி சூடு கலாச்சாரம் அதிகரித்து கொண்டிருப்பது வேதனையை தருகிறது. துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பு 18 லிருந்து 21 ஆக உயர்த்தப்பட வேண்டும்.
பாதுகாப்பு சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். துப்பாக்கியை உற்பத்தி செய்பவர்கள், கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் வாசிங்டன் டிசி பகுதியில் துப்பாக்கிசூடு தாக்குதல்களை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி நூற்றுக் கணக்கான மக்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு துப்பாக்கி கலாச்சாரத்தை எதிர்த்து முழக்கமிட்டனர். இதேபோன்று அமெரிக்கா முழுக்க பல பகுதிகளில் துப்பாக்கி கலாச்சாரத்தை எதிர்த்து மக்கள் பேரணி நடத்தியுள்ளனர்.